முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

19 மாதங்களுக்கு பிறகு இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமலே இருந்து. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். “விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்துள்ளது.

ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழை பள்ளியில் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு பள்ளி நுழைவுவாயிலிலேயே உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. “நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அவர்கள் புத்துணர்வுடன் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக ஆசிரியர்கள் தங்களுடைய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஓவியம், கதை, பாடல், விளையாட்டு உள்பட மனமகிழ்ச்சி செயல்பாடுகளை பள்ளிகள் திறந்ததும் 10 முதல் 15 நாட்களுக்கு நடைமுறைப்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதனை பின்பற்ற வேண்டும் என்றும், அதன்பிறகே பாடங்களை நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதற்கேற்றாற்போல், அனைத்து நடவடிக்கைகளிலும் பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாத காரணத்தினால், பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பின்பற்றவும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம் எனவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும் எனவும் மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை. பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் வழிக்கல்வியையும் தொடரலாம் என்றெல்லாம் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதனை பின்பற்றியே இன்று 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க இருக்கிறது.

நேரடி வகுப்புகள் தொடங்கினாலும், தீபாவளிக்கு பிறகே பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் அறிவிப்பு செய்யப்படுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பக்தர்களுக்கு புதிய விதிமுறைகள் – திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

Halley karthi

காஷ்மீர் செல்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா

Saravana Kumar

கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Jeba Arul Robinson