கிராமப்புறங்களில் ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் தொடங்கப்படவில்லை. கொரோனா 2ம் அலைப் பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு சமைத்த உணவை வழங்கக் கோரி சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் குரூப் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம், ஊரடங்கில் அவர்களுக்கான சத்துணவு வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி அமர்வு, “சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்காக அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்” எனவும் அரசுக்கு அறிவுறுத்தியது. சத்துணவு மாணவர்களுக்கு சமைத்த உணவை வழங்குவது தொடர்பாக அரசின் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு ஆகஸ்ட் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.







