லட்சத்தீவில் பால் பொருட்கள் தொடர்பான கடைகளை மூடியும், மதிய உணவுத் திட்டத்தில் சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருள்களை நீக்கியும் பிறப்பித்த உத்தரவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது.
லட்சத் தீவில் சுமார் 65,000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் தமிழ் மற்றும் மலையாளம் பேசும் இஸ்லாமிய மக்களே பூர்வகுடிகளாக உள்ளனர். மீன் பிடித் தொழிலையும், சுற்றுலாத் தொழிலையும் இவர்கள் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இந்திய யூனியன் பிரதேசமான இந்த தீவுகளை நிர்வகிக்க மத்திய அரசு எப்போதும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நிர்வாகிகளையே நியமித்து வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல்முறையாக ஓர் அரசியல்வாதி கையில் லட்சத்தீவுகளின் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைத்தது மத்திய அரசு. குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரபுல் கோடா பட்டேல் நிர்வாகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் விதித்துள்ள கட்டுப்பாடுகள்தான் தற்போது லட்சத்தீவு மக்களை கவலைகொள்ள செய்துள்ளது.
லட்சதீவு யூனியன் பிரதேச நிர்வாகம், கடந்த 2021ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பு ஆணையின்படி யூனியன் பிரதேசம் முழுவதும் பால் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மூடப்படுவதாக கூறியிருந்தது. மற்றொரு அரசாணையில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் வழங்கப்பட்டு வந்த சிக்கன் உணவு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து அஜ்மல் அகமது என்பவர் கேரள உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து அஜ்மல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீதான உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.