ஐந்து முறை மன்னிப்பு கடிதங்கள் எழுதிய சாவர்க்கர் – நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பேரன்!

அந்தமான் சிறையில் இருக்கும் போது ஆங்கிலேய அரசுக்கு சாவர்க்கர் ஐந்து முறை மன்னிப்பு கடிதங்கள் எழுதியதாக அவரது கொள்ளுப்பேரன் பேரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2023 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றி சில கருத்துகளை வெளியிட்டார். ராகுலின் பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக சாவர்க்கரின் கொள்ளுப்பேரன், சத்யாகி சாவர்க்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு புனேவில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையில் சத்யகி சவர்க்கரிடம் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் மிலிந்த் பவார் குறுக்கு விசாரணை நடத்தினார். அதற்கு பதிலளித்த, சத்யகி சவர்க்கர், “அந்தமான் சிறையில் இருந்தபோது சாவர்க்கர் ஐந்து முறை மன்னிப்பு கடிதங்களை எழுதினார் என்பது உண்மைதான். சாவர்க்கர் மட்டுமல்ல, பல அரசியல் கைதிகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இதேபோன்ற மனுக்களை அனுப்பியுள்ளனர்” என்று கூறினார்.

தொடர்ந்து அவர், “சில வரலாற்றாசிரியர்கள் இரு தேசக் கோட்பாட்டை சாவர்க்கர் முன்மொழிந்ததாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இரு தேச கோட்பாடு குறித்த சாவர்க்கரின் கருத்தாக்கம் சர் சையத் அகமது கானால் முன்மொழியப்பட்டது” என்றார்.

தொடர்ந்து சாவர்க்கர் மீதான மற்ற விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், “பசுவை சாவர்க்கர் ஒரு போதும் கடவுளாக கூறவில்லை. மாறாக அது ஒரு பயனுள்ள விலங்கு என்றே குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் இராணுவத்தில் இந்தியர்கள் சேர வேண்டும் என்று சாவர்க்கர் கூறினார் என்று கூறுவதும் உண்மையல்ல. இளைஞர்கள் அப்போதைய இந்திய இராணுவத்தில் சேர்வதன் மூலம் இராணுவப் பயிற்சி, துப்பாக்கிப் பயிற்சி மற்றும் இராணுவத்தில் பல்வேறு பதவிகளை வகிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்பதே அவர் நோக்கமாகும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.