ஈரான் நாட்டை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதிக்கு கடந்த 2023 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 50 வயதான அவர் பெண்களின் உரிமைகளுக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் போராடி வருபவராவார்.
கடந்த 2021 ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் சிறையில் உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டதால் 2024-ல் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்த நர்கீஸ் முகமதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வடமேற்கு நகரமான ஜன்ஜன்நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு மூன்று முறை ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நர்கீஸ் முகமதிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் நர்கீஸ் முகமதின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக அவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.







