சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 400 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ம் ஆண்டு வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது…

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 400 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ம் ஆண்டு வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் நடைபெற்ற கடுமையான சித்ரவதைகளால் அவர்கள் இருவரும் உயிரிழந்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், சாத்தான்குள காவல் நிலைய ஆய்வாளராக அப்போது இருந்த ஸ்ரீதர் உள்ளிட்ட 10 காவலர்களை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அந்த 10 பேரில் சிறப்பு எஸ்.ஐ பால்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய சிபிஐ 2027 பக்க குற்றப்பத்திரிக்கையை ஏற்கனவே தாக்கல் செய்தது. இந்நிலையில் 400 பக்கங்கள் அடங்கிய கூடுதல் குற்றப்பத்திரிக்கையை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தாக்கல் செய்துள்ளது.  மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நீதிபதி நாகலெட்சுமி முன்பாக நடைபெற்றபோது சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வியாபாரி ஜெயராஜை சாத்தான்குளம் காவல்துறையினர் அழைத்துச் சென்ற வீடியோ பதிவுகள், சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்கள உடம்பில் இருந்தத ரத்தக் கறைகள், ரத்த கரையுடன் இருந்த ஆடைகளை மாற்றியது போன்ற வீடியோ பதிவுகள், தடயவியல்துறை ஆய்வு உள்ளிட்ட விபரங்கள் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.