வீரத்தை வெளிப்படுத்திய இந்திய ராணுவ வீரர்களின் கதைகள் பள்ளி பாடபுத்தகங்களில் இடம்பெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான வீர கதைகள் போட்டியில் வெற்றி பெற்ற 25 மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், வீர கதைகள் போட்டிக்கான யோசனையை வழங்கியவர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்தான் என்றும் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மாணவர்களின் இள மனங்களில் நாட்டுப்பற்றை ஊட்டும் இந்த போட்டி இனி ஆண்டுதோறும் சேனா சூப்பர் 25 என்ற பெயரில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 5 ஆயிரம் பள்ளிகளில் இருந்து 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றதாகத் தெரவித்த தர்மேந்திர பிரதான், இனி வரும் காலங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்படும் என்றும் கூறினார்.
நாட்டுக்கான பொறுப்பை உணரவும், பொறுப்பை ஏற்கவும் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் கடந்த 75 ஆண்டுகளில் வீர தீர செயல்களை புரிந்த ராணுவ வீரர்கள் குறித்த கதைகளை பாட புத்தகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த தர்மேந்திர பிரதான், இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார்.








