மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டகளுக்கு சசிகலா தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா, அதன்பிறகு அமைதியாக இருந்து வந்தார். மார்ச் 3ஆம் தேதி அறிக்கை வெளியிட்டவர், அரசியலில் இருந்து தான் ஒதுங்கியிருப்பதாகவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அவர் பரப்புரை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அக்.16ல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அரசியலிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்த அவர் மீண்டும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றது, அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் இல்லத்தில் கொடியேற்றி, ‘அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்து வைத்தது ஆகியவை அவர் மீண்டும் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கியிருக்கிறாரோ என்கிற கேள்வியை எழுப்பியிருந்தது.
இந்நிலையில் தற்போது மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டகளுக்கு சசிகலா தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறபட்ட அவர் நாளை அமமுக பொதுச்செயலாளரும் தனது அக்காள் மகனுமாகிய டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து 28-ம் தேதி மதுரை செல்லும் சசிகலா, அங்கு முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு, பின் ஆதரவாளர்களை சந்திக்கிறார்.
மேலும், 29-ம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார். 30-ம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் பங்கேற்ற பின் ஆதரவாளர்களை சந்திக்கிறார். பின் மீண்டும் தஞ்சாவூர் செல்கிறார்.
நவ.1-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சசிகலா அங்கும் தன் ஆதரவாளர்களை சந்திக்கிறார். இதன் பின்னர் திருநெல்வேலி உட்பட மேலும் சில மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து அக்கட்சி தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழலில் அரசியல் ரீதியான சுற்றுப்பயணத்தையும்,தொண்டர்களை சந்திப்பையும் சசிகலா திட்டமிட்டு இருப்பது அரசியல் தளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.









