அதிமுகவில் சசிகலா இணைய வாய்ப்பே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமருக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி கோரி, பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் பழனிசாமி மனு அளித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் உடன் இருந்தனர். பின்னர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமமுகவில் தினகரன் மட்டுமே உள்ளார் எனவும், சசிகலா வருகையால் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுகவில், சசிகலா இணைய 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவும், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கவும் அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு பிரதமர் மோடி இசைவு தெரிவித்ததாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமரிடம் கேட்டதாகவும் முதலமைச்சர் கூறினார்.
இலங்கை சிறையில் இருந்து 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், மீதமுள்ள மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.