சசிகலா அதிமுகவில் தான் உள்ளார்- கோவை செல்வராஜ்

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை. அவர் இன்றும் அதிமுகவில் தான் உள்ளார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.  மயிலாப்பூர் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ்…

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை. அவர்
இன்றும் அதிமுகவில் தான் உள்ளார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

மயிலாப்பூர் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குன்னம் இராமச்சந்திரன், தர்மர், பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பான ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், தமிழகம் முழுவதும் கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி டெண்டர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, உப்பு தின்னவர்கள் தண்ணி குடிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். மக்கள் பணத்தை யார் ஏமாற்றி இருந்தாலும் அது தவறு. தன் மீது தவறு உள்ளதா இல்லையா என்பதை அவர் தான் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதிமுகவிற்கும் சம்பந்தமே இல்லை. அதிமுகவில் ஓ.பி.எஸ் எடுப்பது தான் முடிவு. வரும் 28ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து ஓ.பி.எஸ் தான் முடிவு எடுப்பார். கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிக்கலாவை நீக்கவில்லை. அவர் இன்றும் அதிமுக தான். ஓ.பி.எஸ். பட்டா நிலம், எடப்பாடி பழனிச்சாமி புறம்போக்கு நிலம். எனவே பட்டா நிலத்திற்கு தான் செல்வாக்கு அதிகம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.