எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியுள்ளன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது.
அது முதல், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை எதிர்த்தும் காங்கிரஸ் மக்களவை எம்பிக்கள் 4 பேர் கூட்டத் தொடர் முழுமைக்கும் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டன.
மக்களவையில் நடைபெற்ற அமளியை அடுத்து அவை 11.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் முதலில் அவை 12 மணிக்கும், பின்னர் 12.20 மணிக்கும் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் சுஷ்மிதா சென், சாந்தனு சென், டோலா சென், மோசும் நூர், சாந்தா சேத்ரி, நதிமுல் ஹக்கி உள்பட 11 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் அறிவித்தார்.
இதை கண்டித்து, அவைக்கு வெளியேயும், அவைக்கு உள்ளேயும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்றும் செயல்படாமல் முடங்கியது.
நாடாளுமன்றம் தொடங்கியது முதல் அன்டார்டிக்கா தொடர்பான ஒரே ஒரு மசோதா மட்டுமே நிறைவேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.








