கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைந்தது. இதையடுத்து அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன் விலகினார்.
அதற்கு முன் கமீலா நாசர் விலகியிருந்தார். இன்னும் சில நிர்வாகிகள் விலகி இருந்த நிலையில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி யுமான சந்தோஷ் பாபுவும் விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகக் கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ள அவர், கமல்ஹாசனுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இவர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில், சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.
சந்தோஷ் பாபுவை அடுத்து மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்மபிரியாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ’ மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சொந்த காரணங்களுக்காக விலகுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







