சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத
கோமதி அம்பாள் திருக்கோயில் உள்ளது. ஆண்டு தோறும் கொண்டாடப்படும் இந்த கோயிலின் ஆடித்தபசு திருவிழா இந்த ஆண்டு கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் ஒன்பதாம் நாளான இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடை பெற்றது. இதில் கோமதி அம்பாள் திருத்தேரில் வீற்றிருக்க நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வந்து ஆடித்தபசு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மேலும், பஞ்ச வாத்தியங்கள் முன்னே இசைக்க தேரை தடி போட்டும், வடம் பிடித்து இழுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து தேரை நிலை நிறுத்தினர். இந்த விழாவின் சிகர நிகழ்வான ஆடி தவசுக்கட்சி வருகிற 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
—ஸ்ரீ.மரகதம்







