மதுரை வைகை ஆற்றின் அருகே 2 சங்க இலக்கிய பூங்காக்கள் அமைக்கப்படும் என எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மகாகவி பாரதியாரின் திரு உருவச் சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெங்கடேசன், “செல்லூர் பாலத்தின் அடியில் 2 சங்க இலக்கிய பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைய உள்ளது.
வைகை கரையில் இரண்டு புறங்களிலும், சங்க இலக்கியத்தில் மதுரையை பற்றிய தகவல்கள் அடங்கிய புகைப்படங்களை வரைந்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
அதேபோல வைகைக் கரையில் இரண்டு புறங்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வது மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்ய உள்ளோம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்த வரையில், மருத்துவமனைக்கான வரை படத்திற்கான வேலையை JICAA நிறுவனம் தொடங்கி உள்ளது. வரை படத்திற்கான நேரங்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளப்பட்டு பணிகள் விரைவாக முடிக்கப்படும் என நம்புகிறோம். இந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மருத்துவ பணியிடங்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் ஆய்வு செய்து வருகிறது. நீட் தேர்வு முடிந்த பின்பு எத்தனை இடம் என்பது தெரியவரும்.” என தெரிவித்துள்ளார்.








