சென்னையில் பாரதியாரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பாரதியாரின் நினைவு நாளான இன்று, மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மா சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் செப்.11 ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ‘ பாரதி இளங்கவிஞர் விருது’ மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் என்றும்,
பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். என்றும் 14 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








