‘மக்கள் விரோத அரசாக மத்திய அரசு செயல்படுகிறது’’ – டி.ராஜா குற்றச்சாட்டு

அதிமுகவில் நிலவும் இழுபறியைப் பயன்படுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வலுப்பெறலாம் என பாஜக முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது புதுச்சேரி மாநில…

அதிமுகவில் நிலவும் இழுபறியைப் பயன்படுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வலுப்பெறலாம் என பாஜக முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது புதுச்சேரி மாநில மாநாடு இன்றும், நாளையும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முதல் நாளான இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டார். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ள நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அரசியல் கட்சியின் பிரதிநிதியைப் போல அரசியல் ரீதியாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் புதுச்சேரியிலும் பாஜக ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என பாஜகவின் கொள்கையை மக்கள் மீது திணிக்கப் புதுச்சேரி ஆளுநரின் அலுவலகம் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்த அவர், நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை போன்ற மாநில உரிமைகளைப் பறிக்கும் பல்வேறு திட்டங்களைப் புதுச்சேரியில் செயல்படுத்தத் தொடங்கி உள்ளதாகவும், இதனால் மாநில உரிமைகள் பறிபோவதாகவும் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘‘பரந்தூர் விமான நிலையம்; மக்களின் எதிர்ப்பு உணர்வு நியாயமானது’ – காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை’

தொடர்ந்து பேசிய அவர், மாநில நலன்கள் குறித்து அக்கறை இல்லாமல் ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்களும் செயல்படுகிறார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும், அதிமுகவில் நிலவும் இழுபறியைப் பயன்படுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வலுப்பெறலாம் என பாஜக முயற்சி செய்கிறது, இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், மோடி தலைமையில் உள்ள அரசு மக்கள் விரோத அரசாகச் செயல்படுகிறது எனக் கூறினார். மேலும், வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பாஜகவை முறியடித்து மாற்று அரசைக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.