சேலத்தில் வீரகனூர் ஏரிக்கரை பகுதியில் அதிகாலை முதலே படுஜோராக சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனைத் தொடர்பாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் ஓயாத நிலையில், சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்பட்டு, அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தி வரப்பட்டு, ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்று வட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வீடியோவாக பதிவு செய்து போலீசாரிடம் பொதுமக்கள் புகார் அளித்த போதும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில், தற்காலிக சோதனைச் சாவடி மற்றும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : என்ன விளையாடுறீங்களா… நீங்களா பிரிட்டன் பிரதமரின் மாமியார்?? – சுதா மூர்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!!
இருப்பினும், சேலம் கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரிக்கரையில் அதிகாலை முதலே கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. சாராய கும்பலுக்கு போலீசார் ஆதரவாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகமும் காவல்துறை உயர் அதிகாரிகளும், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







