விளை நிலத்திற்குள் விழுந்த மின் கம்பங்கள் அகற்றப்படாத அவலம் -விவசாயிகள் வேதனை!

சேலம் மாவட்டம் ஓமலூரில் பலத்த மழையினால் சாய்ந்து விவசாய நிலத்திற்குள் விழுந்த மின் கம்பங்களை ஒரு வாரமாகியும் அகற்ற இதுவரை மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஓமலூர் மற்றும்…

சேலம் மாவட்டம் ஓமலூரில் பலத்த மழையினால் சாய்ந்து விவசாய நிலத்திற்குள் விழுந்த மின் கம்பங்களை ஒரு வாரமாகியும் அகற்ற இதுவரை மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.மேலும் வீசிய சூறாவளி காற்றில் ஓமலூர் அருகேயுள்ள காட்டுவளவு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ், பழனியப்பன்,செல்லப்பன் ஆகியோரது விவசாய நிலங்களில் நடப்பட்டிருந்த மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்தன. இதனை கண்ட விவசாயிகள் உடனடியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல்
கொடுத்தனர். ஆனால் சுமார் ஒரு வார காலமாகியும் மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை நடுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியிலுள்ள சுமார் 50ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.மேலும் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கு தேவையான தீவணங்களை வெட்டவும்
முடியாமல் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தரப்பில் கூறுவதாவது,இங்குள்ள பல பகுதிகளில் மின் கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

இதுபோன்ற சம்பவம் குடியிருப்பு பகுதியில் நடந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக தலையீட்டு மின் கம்பங்களை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.