சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதே நாளில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
இதனால் இருதரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது. பின்னர் புகாரின் பேரில் அதிமுக தலைமை அலுவலகம் வருவாய் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனது இல்லங்களில் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற ஆலோசனையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட 5 ஆயிரம் பேர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக உள்ளதாக பேசப்பட்டது.
இனி ஓ.பன்னீர்செல்வம் வழியில் நடப்போம் என அவர்கள் தெரிவித்ததாகவும் அந்த ஆலோசனையில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
– இரா.நம்பிராஜன்








