பிகாரில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதன்முறையாக பாட்னா வந்த லாலு பிரசாத் யாதவ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து கடந்த 10ம் தேதி மீண்டும் முதலமைச்சரானார்.
இதன்மூலம், லாலு பிரசாத் யாதவின் மகன்களில் ஒருவரான தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும், மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவ் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.
இந்த அரசியல் மாற்றங்களால் உற்சாகமடைந்த லாலு பிரசாத் யாதவ், டெல்லியில் உள்ள தனது மகளின் வீட்டில் இருந்து பாட்னாவுக்குப் புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நரேந்திர மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறினார்.
மேலும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த புதிய அமைச்சர்கள் சிலர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக பாஜகவின் சுஷில் குமார் மோடி குற்றம் சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த லாலு, சுஷில் மோடி ஒரு பொய்யர் என்றும், கிரிமினல்கள் யாரும் அமைச்சராக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இதையடுத்து பாட்னா சென்ற லாலு பிரசாத் யாதவ்க்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்று லாலு பாட்னாவில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்றார்.
அங்கு சென்ற முதலமைச்சர் நிதிஷ் குமார், லாலு பிரசாத்துக்கு மலர்களைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.அப்போது, லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருந்தார்கள்.
https://twitter.com/yadavtejashwi/status/1559918180469854208?t=O5p9vvwjQ-Rgs9HVVW7Uww&s=19
இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள தேஜஸ்வி யாதவ், மதிப்புக்குரிய முதலமைச்சர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் லாலுவைச் சந்திக்க வருகை தந்தார் என குறிப்பிட்டுள்ளார்.









