ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சுனில் குமார் பட்டை கொலை செய்த தீவிரவாதியின் வீட்டிற்கு அம்மாநில போலீசார் சீல் வைத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மை சமூகத்தவர்களான பண்டிட் சமூகத்தவர்கள் குறிவைத்து கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த மே முதல் இதுவரை 8 பேர் இவ்வாறு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் சோபியானைச் சேர்ந்த பழ விவசாயியான சுனில் குமார் பட், பழ தோட்டத்தில் இருந்தபோது தீவிரவாதி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுனில் குமார் பட்டின் உறவினர் பீதாம்பரநாத் பட் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்தவரின் பெயர் அதில் வானி என்பதும் அவர் கொலை செய்துவிட்டு குத்போராவில் உள்ள தனது வீட்டிற்கு தப்பியோடி வந்து பதுங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார் வீட்டை சுற்றிவளைத்தபோது அவர் இருளில் தப்பி ஒடியுள்ளார்.
இந்நிலையில், தீவிரவாதிக்கு அடைக்களம் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் அதில் வானியின் தந்தை மற்றும் 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் வீட்டிற்கும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.
தீவிரவாதிகள் கொல்லப்படுவது அல்லது கைது செய்யப்படுவது என்பதோடு, அவர்களின் வீடுகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை ஜம்மு காஷ்மீர் போலீசார் சமீப காலமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மதம் 5 வீடுகளுக்க சீல் வைத்த போலீசார் இதுவரை மொத்தம் 10 வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.








