ரயில்வே இடத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்போரை வெளியேற சொன்னதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் பொன்னம்மாப்பேட்டை அருகே உள்ள ரயில்வே அருந்ததியர் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 75 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பாக, அருந்ததியர் தெருவில் உள்ள மக்கள் இன்றைக்குள் வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் வீடுகளை காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். பாய், தலையணை, பாத்திரம் உள்ளிட்ட பொருட்களுடன் வந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். காவல் துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அடுத்தவேளை உணவிற்கே வழியில்லாமல் சிரமப்பட்டு வருகிறோம் என வேதனை தெரிவித்தனர்.
இந்த நேரத்தில் குடியிருப்பு பகுதியில் இருந்து காலி செய்ய சொன்னால் வாழ்வாதாரம் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை தான் ஏற்படும். எனவே ரயில்வே கோட்ட நிர்வாகம் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.