‘சிவ மாதவ்’ இயக்கத்தில், இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் நடிக்கும் படம் ‘3.6.9’. உலக சாதனைக்காக இத்திரைப்படம் தொடர்ச்சியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. 24 கேமராக்களின் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்களைக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் பாடல்கள், சண்டைக் காட்சிகள் ஏதும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகர் ஆரி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் ஆரி மேடையில் பேசும்போது, “ கே.ஜி.எப் vs பீஸ்ட் இல்ல, பீஸ்ட் அண்ட் கே.ஜி.எப்-ன்னு நடிகர் யாஷ் சொல்லிட்டு போனாரு. ஆனா ரிலீஸுக்கு அப்புறம் கே.ஜி.எஃப் ஆண்ட் பீஸ்ட்-ன்னு பெரிய விவாதமே போய்ட்டிருக்கு. சினிமா திட்டுறவங்களையும் வாழ்த்தும், அதே மாதிரி பாராட்டுறவங்களையும் வாழ வைக்கும். இன்னைக்கு திரைப்படங்களை திட்டி யூ-டியூப்ல விமர்சனம் போடுற எல்லாருமே சினிமாவ வச்சிதான் சம்பாதிக்குறாங்க” என்று குறிப்பிட்டார்
மேலும், “இங்க கே.ஜி.எஃப்-ஐயும், பீஸ்ட்-ஐயும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏன் வந்ததுண்ணா, pan-இந்தியா படம் அதுக்கான திட்டமிடுதலோட எடுக்கப்பட்ட படம். ஆனால் பீஸ்ட் தமிழ் பிராந்திய மொழி படம். அதைத்தாண்டி பக்கத்துல எவ்ளோ தூரம் போகுமோ அங்க இருக்கவங்க பாத்துக்கலாம். தமிழ் சினிமாவுல உலகத்தரமான நிறைய படங்கள் வந்திருக்கு. ஏதோ ஒரு படம் சரியில்லைன்னு தமிழ் சினிமாவே சரியில்லை என்பது போல விமர்சனம் பண்ணி அது மூலமா காசுதான் சம்பாதிக்குறீங்களே தவிரே, அது சினிமாவை வளர்த்தெடுக்க பயன்படல. எனவே ரெண்டு படங்களுக்கான விவாதங்களை ரொம்ப ஆரோக்கியமா வைங்க! அதை நான் தாழ்மையா கேட்டுக்குறேன்” என்றும் அழுத்தமாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ‘மாஸாக’ மேடையேறிய ‘திரைக்கதை மன்னன்’பாக்யராஜ் மைக்கை பிடித்தார்…“ஆரி பேசும் போது விமர்சனத்தை பத்தி மட்டுமே பேசிட்டு இருந்தார். அதுதான் எனக்கு கஷ்டமா இருந்தது. விமர்சனம் பண்றதுக்கு தாங்க நாம படமே எடுக்குறோம். சிலபேர் ‘ஹார்ஷா’தான் சொல்லுங்க. எவ்ளோ கடுமையான விமர்சனங்களை முன் வச்சாலும் ‘கஸ்டமர் இஸ் ஆல்வேஸ் கரெக்ட்’ன்னு சொல்லுவாங்கள்ல அந்தமாதிரி தான் நாமலும் எடுத்துக்கணும். அவங்களோட விமர்சனங்களை அடுத்தடுத்த படங்கள்ல சரி பண்ண தான் பாக்கனும், அவங்கள குறை சொல்லக்கூடாது” என்று ஆரிக்கு கவுண்டர் கொடுத்தார்.
https://twitter.com/imKBRshanthnu/status/1516277850843746307
இதற்கிடையில் ஆரி பீஸ்ட்-க்கான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து பேசிய காட்சிகள் இனையத்தில் வைரலாகின. இதனை பாக்யராஜின் மகனும் விஜய்யின் வெறித்தனமான ரசிகருமான சாந்தனுவும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நல்லா சொன்ன மச்சி’ என்று கூறி ஷேர் செய்திருந்தார். ஆரிக்கு பாக்யராஜ் கொடுத்த ‘கவுண்டர்கள்’ விஜய் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பேற்றினாலும், சாந்தனுவின் இந்த ட்வீட் அவர்களை சாந்தமாக்கியுள்ளது. ஏற்கனவே சர்கார் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் பாக்யராஜ் மேல் வருத்தத்தில் இருந்த விஜய் ரசிகர்களை சாத்தனு தான் ‘கூல்’ செய்திருந்தார். அப்படியிருக்க ‘மீண்டும் மீண்டுமா!..’இணையவாசிகள் முணுமுணுத்து வருகின்றனர்.
இன்னொரு புறம் ஆரியின் கருத்தை சிலர் வரவேற்றாலும், சினிமா விமர்சகர்களோ, “சினிமா கலைஞர்கள் எல்லாம் சினிமாவை வாழவைக்க பாடுபடுகிறார்கள், நாங்கள் தான் விமர்சனம் செய்து காசு சம்பாதிக்குறோமா..? படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிவிட்டு, கண்டதை எடுத்து தியேட்டருக்கு வரவைப்பீர்கள். அதையெல்லாம் பார்த்துவிட்டு நாங்கள் ஆஹோ ஓஹோ என்று சொல்ல வேண்டுமா..? நடிகர்கள் 100 கோடி சம்பளம் வாங்குவது உறுத்தவில்லை, எங்களின் விமர்சனங்களுக்கு வெறும் ஆயிக்கணக்கில் வருமானம் வந்தால் மட்டும் உங்களுக்கு எரிகிறதா?” என்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.







