சேலத்தில், எரிவாயு சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலராக பணியாற்றிய, பத்மநாபன் என்பவரின் வீட்டின் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த வீட்டை சுற்றி இருந்த 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதையடுத்து நடைபெற்ற மீட்பு பணியில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், 13 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து விபத்து நடைபெற்ற இடத்தை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திறந்தவெளியில் எரிவாயு சிலிண்டரை வைத்து சமையல் வேலையில் ஈடுபட்டதே விபத்துக்கு காரணம் என தெரிவித்தார். இந்நிலையில், முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சேலத்தில் சிலிண்டர் வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







