செங்கல்பட்டு அருகே இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் என அதிரடி ஆஃபரை பிரியாணி கடை ஒன்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தக்காளியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போதுப் கிலோ ரூ.150க்கு விற்பனையாகி வருகிறது. இதையடுத்து தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சோத்துப்பாக்கத்தில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி கடை ஒன்று வித்தியாசமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு முழு பிரியாணி வாங்கினால், அரை கிலோ தக்காளி இலவசம் என்றும், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் அழிந்து வரும் விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சலுகை வழங்கப்படுவதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.







