ஆத்தூரில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த கீரனூர் காட்டு வளைவு பகுதியைச் சேர்ந்த மாதுவின் மகன் பாலு (வயது 30). இவர் ஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பாலு கடந்த மாதம் 22ஆம் தேதி சிறுமியுடன் தலைமறைவாகியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்,
இந்நிலையில் நேற்று பாலு காவல்துறையினரிடம் பிடிப்பட்டார். இதையடுத்து பாலுவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
பின்னர் அவரிடமிருந்து சிறுமியை மீட்ட காவல்துறையினர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின் பாலு மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







