“கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மை” – டி.கே.சிவக்குமார்

காவிரி விவகாரத்தில் கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மையானது என்று அம்மாநில முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உட்பட பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்தனர்.

இதனிடையே காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்த விட வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. தற்போது அணைகளில் 57 டிஎம்சி நீர் தான் உள்ளது. கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மையானது.

குடிநீருக்காக 40 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவிற்கு கட்டாயம் தேவை. ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 2.9 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் முழு அடைப்பு அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்துவோம்.காவிரி விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும். தற்போதைய சூழல் அமைதியடைந்த பின் தமிழ்நாடு முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேகதாது திட்ட அறிக்கையை மாற்றம் செய்ய உள்ளோம். மாநிலத்தின் நலன் கருதி மிகுந்த எச்சரிக்கை, பொறுப்புடன் அரசு முடிவு எடுக்கும்.” இவ்வாரு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.