சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது, என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ்…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது, என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர், போலீசார் விசாரணையின் போது உயிரிழந்தது தொடர்பாக, ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது, சிபிசிஐடி கொலை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைதாகியுள்ள எஸ்ஐ ரகுகணேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதிகள் சதிகுமார் சுகுமாரகுரூப் ஆகியோர் அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. தனக்கு எதிரான வழக்கில், சிபிஐ-யிடம் ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனு, மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை குறிப்பிட்டு இருந்தார். சிபிஐ ஆவணங்களை வழங்கினால் மட்டுமே, தன்னால் வழக்கை எதிர்கொள்ள முடியும் எனவும், ஆவணங்களை வழங்கும் வரை இடைக்கால தடை வழங்கும்படியும், அதில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.