உக்ரைனிலிருந்து ரஷ்யா ராணுவம் திரும்பவில்லை – அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து ரஷ்யா ராணுவப்படைகள் திரும்பியதற்கான ஆதாரம் இல்லாததால் அங்கு போர் உண்டாக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் போர் நிலவும் அபாயம் உள்ளதால் நெதர்லாந்து, ஜப்பான், தென் கொரியா,…

உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து ரஷ்யா ராணுவப்படைகள் திரும்பியதற்கான ஆதாரம் இல்லாததால் அங்கு போர் உண்டாக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனில் போர் நிலவும் அபாயம் உள்ளதால் நெதர்லாந்து, ஜப்பான், தென் கொரியா, அமெரிகா ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவும் அதன் மக்களை உக்ரைனிலிருந்து வெளியேற உத்தரவிட்டது. இந்நிலையில், போர் நடக்காது என ரஷ்யா அறிவித்துள்ள நிலையிலும், தொடர்ந்து அச்சம் நிலவி வருவதால் மத்திய உள்துறை அமைச்சகம், தகவல் உதவி மையத்தின் கட்டுப்பாட்டு அறையை டெல்லியில் தொடங்கியுள்ளது. கட்டுப்பாட்டு மையத்தின் தொலைபேசி எண்கள், பேக்ஸ் எண், இ மெயில் முகவரி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

இதேபோல், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தில் செயல்படும் 24 மணி நேர சேவை மையத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள், இ மெயில் முகவரி ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவர்கள், இவற்றின் மூலம் தொடர்பு கொண்டு, உதவிகளை பெறலாம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், போர் மூளாது என ரஷ்யா தெரிவித்திருந்தாலும் அங்கிருந்த ரஷ்யா படைகள் திரும்பிச் சென்றதிற்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உக்ரைன் எல்லைப்பகுதியில் ரஷ்யா தனது ராணுவ படைகள் மற்றும் 1 லட்சம் ராணுவ வீரர்களை குவித்ததால் அங்கு பதற்றம் நிலவியது. ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு தொடக்கம் முதலே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களின் குவிப்புக்கு ஐநா உள்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, அமெரிக்காவும் அங்கிருந்து பின்வாங்கியப்படி இருந்ததால், உக்ரைன் எல்லைப்பகுதியிலிருந்து தங்களது ராணுவப்படைகளை திரும்ப பெறுவதாக ரஷ்யா அறிவித்தது. இதையடுத்து, உக்ரைனில் போர் பதற்றம் தணிந்த நிலையில், ரஷ்யாவின் ராணுவப்படைகள் திரும்பியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் இதனால் அங்கு போர் உண்டாகும் வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.