ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தி – பரிதாபமாக உயிரிழந்த 10 பயணிகள்!

மகாராஷ்டிராவில் பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மாநிலம் லக்னோவில் இருந்து மும்பை நோக்கி புஷ்பக் விரைவு ரயில் இன்று மாலை சென்றுக் கொண்டிருந்தது. இந்த ரயில், மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் பத்னேரா ரயில் நிலைய சந்திப்பு அருகே சென்றபோது ரயில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது.

இதனால் அச்சமடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனையடுத்து உடனடியாக ரயில் நின்றது. பயணிகள் சிலர் தண்டவாளத்தில் இறங்கி ஓடினர். அவர்கள் தண்டவாளத்தை கடந்தபோது மறுபுறம் வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் யணிகள் மீது மோதியது.

இதில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து இன்று மாலை 4.19 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இரங்கல் தெரிவித்ததோடு, மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதாக உறுதியளித்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் அறிவித்தார். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்கும் என்று தெரிவித்தார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.