தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்த இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.
சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொடர்ந்து திமுகதான் குரல் கொடுத்து கொண்டே இருக்கும். திமுகதான் விடிவெள்ளியாகவும் உற்ற தோழனாகவும் இருக்கும் என்று நம்பி தங்களை இணைத்துக் கொள்ள இங்கு வந்துள்ளீர்கள் உங்களை எல்லாம் அன்புடன் வரவேற்கிறேன் என தெரிவித்த அவர், கொள்கையில் நழுவிவிடாமல் ஆற்றலோடு விவாதத்தில் பங்கேற்பவர் தான் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி என புகழாரம் சூட்டினார்.
மேலும், திமுகவின் வரலாறு 73 ஆண்டுகால வரலாறு என குறிப்பிட்டு பேசிய அவர், கொட்டுகின்ற மழையில் ராபின்சன் பூங்காவில் 1949-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தொடங்கியதுதான் திமுக என தெரிவித்த அவர், நெருக்கடி நிலைக்குப் பிறகு 13 ஆண்டுகள் கழித்து தான் ஆட்சிக்கு வந்தோம் என தெரிவித்தார். மேலும், 6-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று உள்ளோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காகத் தொண்டாற்றும் பேரியக்கம் திமுக என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது முதலமைச்சர் கூறினார்.
திமுக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திமுகவின் தலைவராக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களில் ஒருவனாக இருக்கும் நான், 13 வயதில் இணைந்தேன், இன்று திமுக ஆட்சி பீடு நடை போட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசுத்துறை பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும், ஆலயங்களில் அன்னைத்தமிழ் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது எனவும் கூறினார்.
அதேபோல, கோப்புகளை தமிழில் தயாரிக்கும் பணிக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது என கூறிய அவர், தெற்காசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களுக்கு 317 கோடியில் சமூக பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் மட்டுமல்லாமல் அங்குள்ள இலங்கை மக்களுக்கும் துணை நிற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்த அவர், 10 அல்லது 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் என்ன செய்திருப்போமோ அதை இந்த ஓராண்டு காலத்தில் திமுக ஆட்சி செய்திருக்கிறது என தெரிவித்தார். மேலும், ஆட்சி என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை எனவும் ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு தொண்டாற்றலாம். ஆட்சியில் இல்லை எனில் மக்களுக்காக போராட வாதாடலாம் என்பதுதான் திமுக. நமது கடமை மக்களுக்கு பணியாற்றுவது என குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் அரசு வேலை தமிழர்களுக்கு தான் என உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









