விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திட்டம் என்பது மிகவும் பயனுள்ள ஒன்று என்றாலும், சிறு குறு விவசாயிகள் போர்வெல் அமைக்க ஆகும் செலவு அதிகமாக உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறுகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஓராண்டிற்குள் சுமார் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில் அரை ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் போர்வெல் அமைக்கும் செலவு அதிகமாக இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவதாக தெரிவித்துள்ளனர்.
டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையே, நீர் நிலைகள் அமைந்த பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு அப்பாலே போர்வெல் அமைக்ப்பட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை அப்படி விவசாய நிலங்கள் அமைவது அரிதாக உள்ளது. பெரும்பாலும் நீர் நிலைகள் அருகிலேயே விவசாய நிலங்கள்உள்ளன. எனவே இதுபோன்ற விதிமுறைகளை சற்று தளர்த்த அரசு முன் வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, அரசின் நோக்கமே அனைத்து தரப்பு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021-22 ஆண்டில் விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதம் பேருக்கு இலவச மின்சாரத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 சதவீதம் பேருக்கு செல்ஃப் பைனான்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு குறைவாக சுமார் ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். இவர்களுக்கு 3ஏ1 என்ற திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இவர்கள் மலர், பழ சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.ஆகையால் இவர்கள் தோட்டக்கலைத்துறையின் கீழ் வருவர். ஆண்டு ஒன்றிற்கு 25 ஆயிரம் ரூபாய் மின் கட்டணமாக செலுத்துகிறார்கள். இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இலவச மின் இணைப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 6 ஆயிரத்து 906 விவசாயிகள் இந்த ஆண்டு மட்டும் இலவச மின் இணைப்பு பெற்றுள்ளனர். இலவச மின் இணைப்பு இல்லாத மாவட்டமாக சென்னை உள்ளது.







