ருதுராஜ்-இஷான் அசத்தல் ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 180 ரன்கள் இலக்கு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாடும், இஷான் கிஷனும் அதிரடியாக விளையாடி அரை சதம் பதிவு செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாடும், இஷான் கிஷனும் அதிரடியாக விளையாடி அரை சதம் பதிவு செய்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்துள்ளது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி.

முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றால் தொடரை கைப்பற்றிவிடும்.
விசாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் பவுமா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்-இஷான் கிஷன் கூட்டணி அதிரடியாக விளையாடி வாண வேடிக்கை காண்பித்தது.

சிஸ்கர்களையும் பவுண்டரிகளையும் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
இருவரும் அரை சதம் பதிவு செய்தனர். ருதுராஜ் கெய்க்வாடுக்கு இது முதல் சர்வதேச டி20 அரை சதம் ஆகும்.

ருதுராஜ் 57 ரன்களிலும் ஸ்ரேயஸ் ஐயர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர், இஷான் கிஷனும் 54 ரன்களில் பிரிடோரியஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். கேப்டன் பண்ட் 6 ரன்களில் நடையைக் கட்ட ஹார்திக் பாண்டியா நிதானம் காட்டினார். தினேஷ் கார்த்திக் வந்த வேகத்தில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பாண்டியா ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார். அக்ஸர் 5 ரன்களில் களத்தில் இருந்தார்.

இவ்வாறாக இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா அணி 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. அந்த அணியில் கேப்டன் பவுமா 8 ரன்களிலும், ஹெண்ட்ரிக்ஸ் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பிரிடோரியஸ், டுசன், டேவிட் மில்லர் ஆகிய வீர்ரகளும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். ஹர்ஷல் படேல், சஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், அக்ஸர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.