பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாத இறுதியில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த சந்தோஷ் ஜாதவ் (24), சூரியவன்ஷி (27) ஆகியோரை குஜராத் மாநிலம், புஜ் மாவட்டத்தில் புனே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புனே மாவட்டம், மாஞ்சார் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டில் பதிவான கொலை வழக்கில் சந்தோஷ் ஜாதவ் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து தப்பிய அவர் தலைமறைவானார். இந்நிலையில், மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புள்ளதாகக் கூறி சந்தோஷ் ஜாதவ், சூரியவன்ஷியை தில்லி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டில் பதிவான வழக்கில் சந்தோஷ் ஜாதவுக்கு அடைக்கலம் அளித்த மஹக்கல் என்பவரை போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் குஜராத்தில் தலைமறைவாக இருந்த இருவரையும் புனே ஊரக போலீஸார் கைது செய்தனர்.
மஹக்கல், சந்தோஷ் ஜாதவ், சூரியவன்ஷி ஆகிய மூன்று பேரும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பதால் இந்த கொலைச் சம்பவத்தில் லாரன்ஸுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பஞ்சாப் காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, திஹார் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-ம.பவித்ரா







