திருநெல்வேலி அலுவலகத்துக்குள் ஆர்டிஓ – மோட்டார் வாகன ஆய்வாளர் இருவரும் மோதி கொண்டனர். இதனால் எப்சிகாக வந்த வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
திருநெல்வேலி, என்ஜிஓ காலனியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலரான சந்திரசேகரும், மோட்டார் வாகன ஆய்வாளரான பிரபாகர் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் அறையில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எப்சிக்கு வந்த நிலையில் எப்சி பார்க்கப்போவதில்லை என மோட்டார் வாகன ஆய்வாளரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் பிடிவாதத்துடன் இருந்துள்ளனர். ஆய்வாளர்கள் வெளியே வராததால் எப்சி காட்டுவதற்காக வந்த வாகனங்கள் சுமார் 3 மணி நேரமாக அலுவலகம் முன்பும் அதன் அருகிலுள்ள சாலைகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பின்னர் சமாதானம் அடைந்த மோட்டார் வாகன ஆய்வாளர் நீண்ட நேரம் கழித்து எப்சி பார்க்க வெளியே வந்தார்.
-அனகா காளமேகன்






