தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – உயர் நீதிமன்றம் அனுமதி

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு,…

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு, சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட 9 நகரங்களில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி, உள்துறை மற்றும் டி.ஜி.பி.க்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்காததால் அனுமதி அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 இடங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், மற்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தவே போலீஸுக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க அதிகாரம் இல்லை என கூறப்பட்டது.

இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், வரும் செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் தமிழக போலீஸ் அனுமதி வழங்க வேண்டும், நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.