முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தடை விதிப்பதா? – வானதி சீனிவாசன் கண்டனம்

அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி தர இயலாது என தமிழக அரசு மறுத்துள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி தர இயலாது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, இந்த ஆண்டுதான் முதல் முறையாக நடப்பது போல சில அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். நாட்டின் விடுதலைக்கு முன்பிருந்தே தமிழகத்தில், விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ். என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கும் ஜனநாயக இயக்கம். 97 ஆண்டுகளை நிறைவு செய்து, 98-வது ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் அடியெடுத்து வைக்கிறது. 2025-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.

அரசியலமைப்பு சட்டப்படி இயங்கும் அமைப்புக்கு, அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, பொதுக்கூட்டம் நடத்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையைப் பறிப்பது ஜனநாயகத்தை முடக்கும் பாசிச நடவடிக்கை. 97 ஆண்டுகளாக நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் எந்த வன்முறையும் நடந்ததில்லை. ஆர்.எஸ்.எஸ். அரசியல் இயக்கம் அல்ல. சமூக, கலாச்சார, தேசபக்தி இயக்கம். தேசத்திற்காக தானாக முன்வந்து உழைக்கும் தன்னார்வலர்களை உருவாக்கும் அமைப்பு. அதனால் தான், உயர் நீதிமன்றமும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது, எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இதுபோன்ற இடையூறுகள் மூலம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகளை முடக்கி விடலாம் என யாராவது கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும். ஆர்.எஸ்.எஸ்.ஸை வீழ்த்த முன்னாள் பிரதமர்கள் பண்டிட் நேரு, திருமதி. இந்திரா காந்தி, திரு.ராஜீவ் காந்தி ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியில் முடிந்ததை  தி.மு.க. அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எந்த நேரு, ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்த்தாரோ அந்த நேருவே, 1963-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் சீருடையுடன் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு அழைப்பு விடுத்தார். வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகிய இரு பிரதமர்களை தந்த இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இத்தகைய பின்னணி கொண்ட ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீண்டும் கேப்டனான ‘தல’ தோனி

EZHILARASAN D

பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு; ஆப்கானிஸ்தானில் போராட்டம்

G SaravanaKumar

தொடர் போராட்டத்தில் ஊழியர்கள்; உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியின் நிலை என்ன?

G SaravanaKumar