ரூ.60 வழிப்பறி… 27 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த சிறப்பு தனிப்படை போலீசார்!

மதுரையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு 60 ரூபாய் வழிப்பறி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் 55 வயதான பன்னீர்செல்வம். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டில், 60…

மதுரையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு 60 ரூபாய் வழிப்பறி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் 55 வயதான பன்னீர்செல்வம். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டில், 60 ரூபாயை வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் காவல்துறையினரால்
வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக
ஆஜராகாமல் தலைமறைவானார்.

தலைமறைவான பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் பல இடங்களில் தேடிய போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து பன்னீர்செல்வத்தை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை பிடித்து, வழக்கு விசாரணைகளை முடிப்பதறகான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மதுரை மாநகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படை காவல்துறை உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் காவல்துறையினர் பழைய வழக்குகளை ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த பன்னீர்செல்வம் குறித்து, ஜக்காதோப்புக்கு சென்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வசிப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிவகாசிக்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வதாக கூறி, பன்னீர்செல்வம் குடும்பத்தினரிடம் பெயர், விபரங்களை கேட்டு உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிவகாசியில் ஒயின் ஷாப் ஒன்றில் பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வத்தை
காவல்துறையினர் கைது செய்து அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை
மத்திய சிறையில் அடைத்தனர். 60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு ஆணையாளர் லோகநாதன் பாராட்டு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.