மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் திருவருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கட்சி கொடியேற்றி வைத்து கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “3-ம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற திமுக அரசில் அத்தியாவசியப் பொருள்களின் விலை விஷம்போல ஏறியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவை இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கு மக்களின் சுமையைக் குறைக்கும்பொருட்டு கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும்.
சாலையோர வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.8,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.







