பிச்சைக்காரன் 1ல் ரூ.1000…. பிச்சைக்காரன் 2ல் ரூ.2000….. ஒருவேளை இருக்குமோ??

மே 19, 2023…. சரியாக 6.30 மணி இருக்கும்.. எல்லா செய்தி சேனல்களிலும் ரூ.2000 நோட்டுகள் செல்லாது எனும் செய்தி பரவலாக வந்த வண்ணம் இருந்தது. என்னவென்று சற்று உற்று கவனிக்கையில் தான் தெரிந்தது,…

மே 19, 2023…. சரியாக 6.30 மணி இருக்கும்.. எல்லா செய்தி சேனல்களிலும் ரூ.2000 நோட்டுகள் செல்லாது எனும் செய்தி பரவலாக வந்த வண்ணம் இருந்தது. என்னவென்று சற்று உற்று கவனிக்கையில் தான் தெரிந்தது, ரிசர்வ் வங்கியானது தங்களது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. இருப்பினும் செப்டம்பர் 30 வரை இது செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது. இது எங்கோ கேள்விபட்டது போல் இருக்கிறதே…. கூர்ந்து யோசிக்கையில் இந்த அறிவிப்பிற்கும்,  நடிகர் விஜய் ஆண்டனிக்கும் எதிர்பாராத வகையில் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு இருப்பதாக தெரிகிறது…..

இயக்குநர் சசி இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனியே தயாரித்து, அவரே நடித்து, அவரே இசையமைத்த பிச்சைக்காரன் திரைப்படம், மார்ச் 4, 2016 அன்று வெளியாகி, கிட்டத்தட்ட 45 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பிச்சைக்காரர் ஒருவர், 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என கூறுவார். ஏனெனில் இந்தியாவில் வறுமைக்கும், வளர்ச்சியின்மைக்கு காரணம் லஞ்சமும் ஊழலும் தான் என கூறும் அவர், அதை ஒழித்தால் நாட்டில் பிச்சைக்காரர்கள் கூட இருக்க மாட்டார் என கூறுவார். அவர் சொன்ன நேரமோ என்னவோ, படம் வெளியாகி சரியாக 8 மாதம் கழித்து நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார், அது மட்டுமின்றி அன்று முதல் புதிய இந்தியா பிறந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. கூகுள் பே, பேடிஎம் போன்ற UPI வசதிகள் பெரிதும் இல்லாத அந்த காலத்தில் மக்கள் மிகநீண்ட வரிசையில் ATM மைய வாசலில் அணிவகுத்து நின்றனர். ரூபாய் நோட்டுகள் தீர்ந்து போதிலும், சில இடங்களில் ATM இயந்திரங்கள் வேலை செய்யாத நேரத்தில், மக்களுக்கும், வங்கி நிர்வாகத்திற்கும் சில தள்ளுமுள்ளு சம்பவங்கள் ஏற்பட்டது.

இதற்கு காரணம் நாட்டில் ஊழலையும், கறுப்பு பணத்தையும் ஒழிப்பதற்கு என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. எதிர்கட்சிகளின் தரப்பில் கடும் விமர்சனதிற்கும் உள்ளானது. இதுதான் நேரம் என நெட்டிசன்கள் பலர் இந்த விஷயத்தை அப்பொழுது வெளியான பிச்சைக்காரன் முதல் பாகத்துடன் இணைத்து பயங்கரமாக கலாய்த்து தள்ளினர். மேலும் அந்த சீனில் வர்ணனையாளர் ஒருவர் “இவரை போன்றவர்கள் தான் நமது நாட்டிற்கு பிரதமராக வரவேண்டும்” என கூறியிருப்பார். இதுவும் பயங்கரமான கலாய்த்தலுக்கு உள்ளாகியது.

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது மக்களிடத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் 2000 ரூபாய் நோட்டுகள் எதுவும் மக்கள் கைகளில் இல்லை, கண்களுக்கு தென்படவதுமில்லை என்பதை பொதுமக்கள் நியூஸ்7 தமிழுக்கு  அளித்த பேட்டியில் தெரிவித்தனர். இதைக்காட்டிலும் எது பெரும் பேசுபொருளானது என பார்க்கையில் இன்று வெளியான பிச்சைக்காரன் இரண்டாம் பாகமே.

ஏனெனில் பிச்சைக்காரன் முதலாம் பாகம் வெளியான அடுத்த 8 மாதத்தில் பிரதமர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் வெளியான இதே நாளில் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்பட்டுள்ளது நகைச்சுவை கலந்த பேசு பொருளாகியுள்ளது. எப்படியோ, பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு இதுவும் ஒரு ப்ரோமோஷனாகவே அமைந்துள்ளது. பிச்சைக்காரன் 3 ஆம் பாகம் வெளியானால், அப்போது அரசிடம் இருந்து என்ன அறிவிப்பு வரப்போகிறது என்று நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

  • ஆண்ட்ரு, நியூஸ் 7 தமிழ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.