2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் முடிவு எதனால் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், அது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால் ரூபாய் நோட்டு புழக்கத்திற்கான தேவையை கருத்தில்கொண்டு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதாலும், போதுமான அளவுக்கு மற்ற ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததால் 2018 – 19ம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பாக 87 சதவீதம் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்பட்டதால் அதன் ஆயுட் காலமான 4 முதல் 5 ஆண்டுகளை அவை அடைந்துவிட்டதாலும், ரூபாய் பரிமாற்றங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை என்பதாலும் அவை திரும்ப பெறப்படுகிறது. பொதுமக்களுக்கு தரமான ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்ட தூய்மையான ரூபாய் நோட்டு கொள்கையின் படி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
திரும்ப பெறப்பட்டாலும் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் பொதுமக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிப் பண பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வரும் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிக்கிளைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களிலும் மாற்றிக்கொள்வதற்கும், டெபாசிட் செய்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கியில் 2000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தருவதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் செய்ய வசதியாக மே 23ம் தேதி முதல் வங்கிக்கிளைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களை பொதுமக்கள் அணுகலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் கொண்டுவரும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் வாடிக்கையாளராக இல்லாத நபர்களும் எந்த ஒரு வங்கியின் கிளைகளிலும் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்கு எந்த ஒரு கட்டணமும் விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.