செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கி சிறப்பிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ந்தேதி தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இதன் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து 12 நாட்கள் நடந்த இப்போட்டி நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த செஸ் போட்டியில் ஓபன் பிரிவில் உஸ்பெஸ்கிதான் தங்க பதக்கமும், அர்மேனியா வெள்ளி பதக்கமும், இந்தியா வெண்கல பதக்கமும் பெற்றது. இதேபோல் மகளிர் பிரிவில் உக்ரைன் தங்க பதக்கமும், ஜார்ஜியா வெள்ளி பதக்கமும், இந்தியா வெண்கல பதக்கமும் வென்றது.
இதையடுத்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.
இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் பொதுப் பிரிவில் ‘இந்திய பி அணியும்’ பெண்கள் பிரிவில் ‘இந்திய ஏ அணியும்’ என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
44-வது சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய பி அணிக்கும்’, பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி’ ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும் என தெரிவித்துள்ளார்.







