டாக்ஸியில் சென்ற பெண்ணைக் கடத்தி 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி, நள்ளிரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தொலை பேசி வாயிலாக புகார் ஒன்று வந்ததுள்ளது. தன்னை கால் டாக்சி ஓட்டுநர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், மதுரவாயில் சுங்கச்சாவடி அருகே தன்னை தாக்கிவிட்டு, கால் டாக்சியில் வந்த பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் காரோடு கடத்திச் சென்றதாக கூறியிருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு சென்று கார் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கடத்தப்பட்ட காரின் பதிவு எண்ணைக் கொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரித்தனர். சிறிது தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத விளையாட்டு மைதானத்தில் கடத்தப்பட்ட கார் நின்று கொண்டிருப்பதை போலீஸார் பார்த்துள்ளனர். காரின் அருகே சென்று பார்த்தபோது, அருகே பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டு போலீஸார் அங்கு சென்றனர்.
போலீஸார் வருவதைப் பார்த்த அங்கிருந்த கும்பலைச் சேர்ந்த 4 பேர் தப்பி ஓட, கஞ்சா போதையில் ஒருவர் போலீஸாரிடம் சிக்கினார். காரில் பயணித்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு ரத்தக் காயங்களுடன் இருந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த அந்த பெண் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் மதுரவாயில் புறநகர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே 24 மணிநேரம் இயங்கும் டீ கடை நடத்தி வருகிறார். மனைவி அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இவர்களது சொந்த ஊர் விழுப்புர மாவட்டம் அருகே உள்ள ஒரு குக்கிராமம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரில் ஆடி திருவிழாவிற்குச் செல்ல தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக கால் டாக்சி ஒன்றை புக் செய்துள்ளனர். மனைவியும் குழந்தைகளும் காரில் செல்ல கணவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திருவிழா முடிந்து, அதே கால்டாக்ஸியில் குழந்தைகளுடன் சென்னையில் உள்ள அவர்களது டீக்கடைக்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேரம் ஆனதால் குழந்தைகளை கணவருடன் வீட்டிற்கு அனுப்பியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண். சிறுது நேரத்தில் டீக்கடையில் வியாபாரம் செய்துவிட்டு, கால் டாக்ஸியில் வீட்டிற்குச் சென்றுள்ளார். கார் சில கிலோ மீட்டர் சென்றதும் மர்ம நபர் ஒருவர் காரை வழிமறித்துள்ளார். கார் நின்றதும் மறைந்திருந்த 5 நபர்கள் கார் ஓட்டுநரை தாக்கி விட்டு, கழுத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி காரோடு கடத்திச் சென்றுள்ளனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத மைதானத்தில் காரை நிறுத்தி, 5 பேர் சேர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அணிந்திருந்த 15 சவரன் நகைகளை பறித்துச் சென்றதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
கஞ்சா போதையில் சிக்கிய இளைஞரிடம் போலீஸார் மறுநாள் காலையில் போதை தெளிந்ததும் விசாரணை நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், கார் ஓட்டுநரும் பேசிக்கொண்டு காரில் சென்றதை அறிந்து, நண்பர்களுடன் சேர்ந்து கார் ஓட்டுநரைத் தாக்கி விட்டு, பெண்ணை கடத்தி நகைகளை பறித்துக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின்படி, நகைகளுடன் தப்பி ஓடிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கூட்டு சதி, கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 15 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
காரில் இருந்த பெண்ணை கடத்தி 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.