முக்கியச் செய்திகள் உலகம் சினிமா

மீண்டும் ஆஸ்கர் ரேஸில் ’RRR’ திரைப்படம்!

ஒருவேலை ஆஸ்கார் பந்தயத்தில் RRR படம் நுழையுமாயின் ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்ற முதல் டோலிவுட் திரைப்படமாக இருக்கும்.

வரவிருக்கும் 95வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படங்கள் பிரிவில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த, பான் நளினின் ’செல்லோ ஷோ’ என்ற குஜராத்தி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 95வது ஆஸ்கார் விருதுகள் மார்ச் 12, 2023 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் டோலி திரையரங்கில் நடைபெறவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பான் நாலின் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, டிபன் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சித்தார்த் ராய் கபூர் ஃபில்ம்ஸ், ஜுகத் மோஷன் பிக்சர்ஸ், மான்சூன் ஃப்லிம்ஸ், மற்றும் மார் டுலே நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ட்ரிபேக்கா திரைத் திருவிழாவில் சர்வதேச திரைப்படப் பிரிவில் இப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது.

பலரும் செல்லோ ஷோ படத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இணையத்தில் சிலர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவான “RRR” படத்தை ஏன் தேர்வு செய்யவில்லை எனக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பான் இந்தியப் படமாக வெளியான RRR திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளைப் படைத்தது.

இப்படி பலரால் ரசிக்கப்பட்ட RRR படம் ஆஸ்கர் விருதுப்பட்டியலில் இடம் பெறமால் போனது திரை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதாகப் பலர் தங்களது கருத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் RRR படத்தை ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மேலும், அனைத்து வகைகளிலும் RRR திரைப்படத்தை அகாடமி விருதுகளுக்குப் பரிசீலிக்க வெண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், RRR படத்தை ஆஸ்கர் பட்டியலில் இடம்பெறச் செய்ய, படத்தின் U.S வினியோகஸ்தர் சார்பில் மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளனர். மேலும் 10,000 உறுப்பினர்களைக் கொண்ட அகாடமி விருது குழுவிற்கு RRR படத்தை அனைத்து வகையான விருதுகளுக்கும் வாக்களிக்கப் பரிசீலிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த முன்னணி நடிகர், சிறந்த துணை, சிறந்த துணை நடிகை என முக்கிய விருதுகளுடன் அசல் பாடல், அசல் ஸ்கோர், ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிவமைப்பு, திரைப்பட எடிட்டிங், ஆடை வடிவமைப்பு, ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், ஒலி மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் ஆகியவற்றிற்காகவும் RRR திரைப்படத்தைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இன்னும் அகாடமி ஸ்ட்ரீமிங் அறையில் RRR படத்திற்கு இடம் கிடைக்காத நிலையில் பெரிய திரையில் பல அகாடமி வாக்காளர்களைப் பார்க்க வைக்கும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களில் எஸ்.எஸ்.ராஜமௌலி RRR படத்தை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டு சென்று திரையிட்டு வருகிறார். இந்தத் திரைப்படம் உலகளவில் $140 மில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்து, இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களிலே இந்தப் படம் தான் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும், நெட்ஃபிளிக்ஸில் 14 வாரங்களுக்கு மேலாக உலகளவில் டிரெண்டிங்கில் இருந்த படமாகவும் இருக்கிறது.

படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க TCL சீன ஐமாக்ஸ் திரையரங்கில் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது அந்த வார இறுதிக் காட்சியின் ஒட்டு மொத்த டிக்கெட்டுகளையும் 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்து ஹவுஸ் ஃபுல் ஆனது. மேலும் உலகளவில் அதன் முதல் நாளில் 240 கோடிகள் (US $30 மில்லியன்) வசூலித்து, “RRR” ஒரு இந்தியத் திரைப்படங்களின் முதல் நாள் சாதனைகளை முறியடித்தது.

ஒருவேலை ஆஸ்கார் பந்தயத்தில் RRR படம் நுழையுமாயின் ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்ற முதல் டோலிவுட் திரைப்படமாக இருக்கும் என்பதால் தென்னிந்தியத் திரைப்பட ரசிகர்களின் பார்வை இப்படத்தின் மீது திரும்பியுள்ளது.

கூழாங்கல், ஜல்லிக்கட்டு, கல்லி பாய், வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், நியூட்டன், விசாரணை ஆகிய திரைப்படங்கள் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டு ஆஸ்கார் விருதுப் பட்டியலில் இடம் பெறத் தவறிவிட்டன. இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பல்வேறு கலாச்சார சாராம்சங்களுடன் ஆயிரக்கணக்கில் வெளியாகும் படங்கள் வரிசையில் இதுவரை மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் லகான் ஆகிய படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள்.

இதனால் இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தவறான நடவடிக்கைகளாலும் பெரியளவில் ரசிகர்களுக்குப் பரிட்சயம் இல்லா படங்களை அவர்கள் தேர்வு செய்ததாலே இந்தியாவிற்கு ஆஸ்கர் இன்னும் எட்டாக்கனியாக இருப்பதாகப் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளின் பொது நுழைவுப் பிரிவுகளுக்கான சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 15ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் உலகின் பல இடங்களிலிருந்தும் திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் இறுதி தேர்வு பட்டியலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 12 ஆம் தேதி துவங்கவுள்ளது. இதனால் திரை ரசிகர்கள் பலர் RRR படத்திற்கு மற்றொரு வாய்ப்பிருப்பதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

– செ.யுதி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் : கமல்ஹாசன்

EZHILARASAN D

நடிகர் அஜித் செய்த உதவி- பைக் பயணியின் நெகிழ்ச்சிப் பதிவு!

EZHILARASAN D

வைகுண்ட ஏகாதசி பெருவிழா; விமரிசையாக நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி!

Jayapriya