பாகுபலி இயக்குநரின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தான் ஆஸ்கர் 2023 தேர்வுப் பட்டியலில் இடம்பெறும் எனப் பரவலாகப் பேசப்பட்ட நிலையில் செல்லோ ஷோ’ என்ற குஜராத்தி படம் பரிந்துரை செய்யப்படுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான இந்தியாவின் படங்களின் சார்பில் குஜராத்தி திரைப்படமான செலோ ஷோ என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த அறிவிப்பை இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் நாகபர்ணா நேற்று அறிவித்திருந்தார்.
95வது ஆஸ்கார் விருதுகள் மார்ச் 12, 2023 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் டோலி திரையரங்கில் நடைபெறவுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளின் பொது நுழைவுப் பிரிவுகளுக்கான சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 15ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் உலகின் பல இடங்களிலிருந்தும் திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் இறுதி தேர்வு பட்டியலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 12 ஆம் தேதி துவங்கவுள்ளது.
பான் நாலின் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, டிபன் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சித்தார்த் ராய் கபூர் ஃபில்ம்ஸ், ஜுகத் மோஷன் பிக்சர்ஸ், மான்சூன் ஃப்லிம்ஸ், மற்றும் மார் டுலே நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ட்ரிபேக்கா திரைத் திருவிழாவில் சர்வதேச திரைப்படப் பிரிவில் இப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது.
ஏதோ ஒரு கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுவனுக்கு அந்த ஊரில் உள்ள திரையரங்கால் ஏற்பட்ட சினிமா மீதான அவனது அதீத காதல் ஏற்படுகிறது. அவன் வாழ்கையில் சினிமாவின் ஊடுருவி அவனுக்குள் ஏற்படும் மாற்றங்களையும் சலனங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கதையம்சம் கொண்ட பிரெஞ்சு திரைப்படமான ‘சினிமா பாரடைசோ’ 1990ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான அகாடமி விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தரப்பில் காஷ்மீர் ஃபைல்ஸ் அல்லது ஆர்ஆர்ஆர் திரைப்படம் தான் ஆஸ்கர் 2023 தேர்வுப் பட்டியலில் இடம்பெறும் எனப் பரவலாகப் பேசப்பட்டது.
ஆனால் செலோ ஷோ திரைப்படம் தேர்வாகி இருப்பதால் இப்படம் குறித்த பேச்சே தற்போது இணையத்தில் வலம் வந்த வண்ணமாக உள்ளது.
கூழாங்கல், ஜல்லிக்கட்டு, கல்லி பாய், வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், நியூட்டன், விசாரணை, ஆகிய திரைப்படங்கள் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டு ஆஸ்கார் விருதுப் பட்டியலில் இடம் பெறத் தவறிவிட்டன.
இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பல்வேறு கலாச்சார சாராம்சங்களுடன் ஆயிரக்கணக்கில் வெளியாகும் படங்கள் வரிசையில் இதுவரை மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் லகான் ஆகிய படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள்.







