“அரசனை மிஞ்சிய அரச விசுவாசம்!” – கிருஷ்ணசாமி கண்டனம்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருக்கு ‘அரோகரா’ பாடியதற்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நவம்பர் மாதம் 15-ஆம் தேதி திருச்செந்தூர் முருகப்பெருமானின் கந்த சஷ்டி திருவிழாவில், முருகப்பெருமானுக்கு நிகராக முதலமைச்சர் விஜயை ஒப்பிட்டுப் பேசியதும், முதலமைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் ’அரோகரா’ பாடியதும் தமிழ்நாடெங்கும் மிகப்பெரும் கண்டனக் குரலை எழுப்பியுள்ளது.

’அரோகரா’ பாடியது அவர்கள் இருவருக்கும் தெரியுமோ, தெரியாதோ; ஆனால், அத்தலத்தின் தலைவனாக போற்றப்படக்கூடிய முருகப்பெருமானோடு யாரையும் ஒப்பிட்டுப் பாடவோ, பேசவோக்கூடாது என்பதை அப்பாடகர்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அங்கு நடந்த சம்பவம் வரம்புமீறியது, கண்டனத்திற்குரியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தனிநபர் துதி பாடுவது எல்லை மீறுகிறது!

தமிழகத்தில் தனிநபர் துதி பாடுவது என்பது பல நேரங்களில் எல்லையைத் தாண்டிச் சென்றுவிடுகிறது. 1995-இல் அம்மையார் ஜெயலலிதாவை மேரி மாதாவுக்கு ஒப்பிட்டுச் சில அதிமுக விசுவாசிகளால் ஒட்டப்பட்ட போஸ்டர் கிறித்தவர்கள் தரப்பில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி, அதற்குப் பிறகு அது அகற்றப்பட்டது. இது அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்குத் தெரிந்திருக்கும் என்று நாம் கருத இயலாது. சில நேரங்களில், பெரும் பதவியில் இருக்கக்கூடியவர்களின் பார்வையில் படவேண்டும் என்பதற்காக, அவர்களின் தொண்டர்கள் எல்லை கடந்து செய்யக்கூடிய விளம்பரங்கள் அந்தத் தலைவர்களின் புகழுக்கே பாதிப்பை உண்டாக்கிவிடுகின்றன.

எந்தத் தமிழகத்தில் சுயமரியாதை இயக்கங்கள் தோன்றி, அளவுக்கு அதிகமாக, மிதமிஞ்சிய வகையில் தனிநபர் துதிபாடக் கூடாது என்ற சித்தாந்தம் உருவாக்கப்பட்டதோ, அதே தமிழகத்தில்தான் ஒரு சாதாரணமான நபர் அமைச்சர் ஆகி அதிகாரத்திற்கு வந்துவிட்டாலே அவர்களை ’அரசியல் வழிகாட்டி’ என்று மேடையிலே புகழ்வதும், ஒரு ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆகிவிட்டாலே அவர்கள்தான் தங்களுக்கு எஜமானைப் போன்றவர்கள் என்று புகழ்பாடுகின்ற அடிமை மனப்பான்மை இன்னும் தமிழகத்திலிருந்து அகலவில்லை. எல்லோருடைய மனதிலும் அப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாது.

ஆனால், மற்றவர்களின் புகழ்பாடி, வீண் பெருமை பேசி, அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து மட்டுமே அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களின் தயவைப் பெற முடியும் என்ற அடிமை மனப்பான்மை கொண்ட சிலருடைய நடவடிக்கைகள், தமிழகத்தின் ஒட்டுமொத்த மாண்பையும் கெடுக்கின்றன. பெரும் பதவிக்கு வந்துவிட்டால் அவர்களை இயேசுவோடு ஒப்பிடுவது, முருகனுக்கு நிகராக வைத்துப் பார்ப்பது போன்ற கேவலமான நிலைகள் எல்லாம் தமிழகத்தில்தான் உருவாகியிருக்கின்றன. தென் தமிழகத்திலே, நமது காலத்திலேயே தோன்றி மறைந்த ஒரு தலைவரின் காலடியில் முருகச் சிலையை வைத்து அவமானப்படுத்துவதை, இந்து நம்பிக்கையாளர் நம்மிடத்திலே பலமுறை கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கையும் அரசியல் தலைவர்களும்!

கடவுள் நம்பிக்கை என்பது வேறு, மறுப்பு என்பது வேறு. ஆனால் தமிழகத்தில் 90 சதவீத மக்கள் ஏதாவது ஒரு நம்பிக்கையில் இருக்கிறார்கள்; அவர்கள் இந்துக்களாகவோ, இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ இருக்கலாம். அவர்கள் போற்றக்கூடிய கடவுள்கள் அல்லது இறைத் தூதர்களோடு அரசியல் தலைவர்களை ஒப்பிட்டு புகழ்பாடுவது என்பது தான், அரசனை மிஞ்சிய அரச விசுவாசம். அதாவது ‘More Loyal to the king than the king himself’ என்று அழைப்பார்கள். அந்த வகையில், தெரிந்து செய்திருந்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் திருச்செந்தூர் கந்தப்பெருமான் கந்த சஷ்டி திருவிழாவில் முதல்வருக்கு ’அரோகரா’ சொன்னதும், அமைச்சருக்கு ’அரோகரா’ சொன்னதும் கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது!

அதேபோல தமிழகத்தின் எந்தப் பகுதியிலும், நம்முடைய கண் முன்னாலே வாழ்ந்து மறைந்த தலைவர்களின் அருகாமையில் முருகப் பெருமானுடைய சிலைகளை வைத்து அவமதிப்பது; ஏழுபடை வீடு, எட்டுப்படை வீடு என்றெல்லாம் மிகைப்படுத்துவது குற்றமாகும். தமிழகத்தில் இறை நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் அவர்கள் போற்றும் கடவுள்களோடு யாரையும் ஒப்பிட்டு பேசக்கூடாது. இதுபோன்ற அநாகரிகங்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.