போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் கடந்த 7 ஆம் தேதி கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட பேச்சிதுரை என்ற ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்திருபுவனத்தை சேர்ந்த ரவுடிகள் பேச்சித்துரை (23),  சந்துரு…

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் கடந்த 7 ஆம் தேதி கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட பேச்சிதுரை என்ற ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தென்திருபுவனத்தை சேர்ந்த ரவுடிகள் பேச்சித்துரை (23),  சந்துரு (23)  கடந்த 7 ஆம் தேதி அன்று மாலையில் விளாங்குடி பகுதியில் ஒருவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து திருவிடைமருதூர் செல்லும் வழியில் அரசு பேருந்தை வழிமறித்து அரிவாளால் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.  இதனைக் எதிர்த்து கேட்ட ஓட்டுநர்,  நடத்துநரை அரிவாளால் வெட்ட விரட்டியுள்ளனர்.  இந்த தகவலறிந்து வீரநல்லூர் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

போலீஸாரை பார்த்ததும் ரவுடிகள் தப்பியோடியுள்ளனர். அவர்களை விரட்டி சென்றபோது வீரநல்லூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் செந்தில்குமார் (35) என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.  பின்னர் அருகில் உள்ள வயல்வெளிகளில் புகுந்த ரவுடிகளுக்கும்,  போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பேச்சுத்துரையை பிடித்தனர்.  சந்துரு அங்கிருந்து தப்பியோடினார்.

இதனையடுத்து சுட்டுப் பிடிக்கப்பட்ட பேச்சித்துரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பேச்சித்துரை இன்று உயிரிழந்தார்.  இதனைத் தொடர்ந்து வீரவநல்லூர் மற்றும் பேச்சித்துரை சொந்த ஊர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.