திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் திருமணமாகி இரண்டு நாட்களே ஆன பெண் உள்பட 3 பேர் பலி.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் ஜீவிதா ஆகியோருக்கு கடந்த திங்கட்கிழமை அன்று திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகளான இவர்கள் எழுமாத்தூரில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு பொலிரோ ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் 35, மற்றும் சுப்பிரமணியம் 50 ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பரமத்தி வேலூர் சாலையில் புளியம்பட்டி சுரக்காய் தோட்டம் அருகே இருசக்கர வாகனமும் பொலிரோ ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கலை சேர்ந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.
பொலிரோ காரில் வந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஜீவிதா ஆகியோர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர் இதில் ஜீவிதாவுக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவரும் பலியானார். ஜீவிதாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் திருமணமாகி இரண்டு நாட்களே ஆன நிலையில் கோவிலுக்கு செல்ல காரில் வந்து கொண்டிருந்த போது நேர்ந்த விபத்தில் கணவன் கண்ணெதிரிலேயே ஜீவிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் மூன்று பேரின் உடல்களும் திருச்சங்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







