காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான ரிஷப் ஷெட்டி..!

காப்புரிமை விவகாரத்தில் காந்தாரா திரைப்பட பாடல் சிக்கியதை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் காவல்துறையினர் அதிரடி விசாரணையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிற மொழி படங்கள், தமிழில் வெளியாகி பிளாக்…

காப்புரிமை விவகாரத்தில் காந்தாரா திரைப்பட பாடல் சிக்கியதை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் காவல்துறையினர் அதிரடி விசாரணையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற மொழி படங்கள், தமிழில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடிப்பது ஒன்றும் புதிதல்லை. அது போன்ற பெரும் வெற்றி பெற்ற பட வரிசையில் கன்னட படமான காந்தாராவும் இணைந்து இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பட்டையை கிளப்பி உள்ளது. ரூ. 16 கோடி பட்ஜெட்டில் தயாரான “காந்தாரா” படம் சுமார் 400 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பாராட்டைப் பெற்ற படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காந்தாரா படத்தில் “வராகரூபம்” என்ற பாடல் இடம் பெற்று உள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் பாடல் “நவரசம்” என்ற ஆல்பத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று கூறி கேரளாவை சேர்ந்த ‘தைக்குடம் பிரிட்ஜ்’ என்ற இசைக்குழு கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தது. இது தொடர்பாக காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, தயாரிப்பாளர் விஜய் கிர்குந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 2 பேரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வராகரூபம் பாடலை படத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் 2 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கியது.

இதை எதிர்த்து காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, தயாரிப்பாளர் விஜய் கிர்குந்தர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வராகரூபம் பாடலை பயன்படுத்தக் கூடாது என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்கியது. மேலும் ரிஷப் ஷெட்டியும், தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூரும் கோழிக்கோடு டவுன் காவல் நிலையத்தில் 2 நாட்கள் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டது.

இதன்படி காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, தயாரிப்பாளர் விஜய் கிர்குந்தர் கோழிக்கோடு டவுன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளை மிரட்டவோ அல்லது சாட்சியங்களை கலைக்கவோ கூடாது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், மனுதாரர்கள் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.