“ஆவின் பாலகங்களின் வாடகை உயர்வை உடனே திரும்பப் பெறுக” – அன்புமணி

ஆவின் பாலகங்களின் மாத வாடகையை 140% உயர்த்துவதா? ஏழை சிறுவணிகர்களை பாதிக்கும் வாடகை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் நிறுவனம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில் செயல்பட்டு வரும் 213 ஆவின் பாலகங்களின் மாத வாடகை 140% உயர்த்தப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இல்லாமல், சிறிய முதலீட்டில் பாலகம் நடத்தி வரும் ஏழை சிறு வணிகர்களை பாதிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

ஆவின் பாலகங்களின் மாத வாடகை ஜிஎஸ்டி வரிகளையும் சேர்த்து ரூ.4130 ஆக இருந்த நிலையில், இப்போது ரூ.5782 உயர்த்தப்பட்டு ரூ. 9,912 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடப்பாண்டில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது வாடகை உயர்வு ஆகும்.

முந்தைய திமுக ஆட்சியில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, ஆவின் பாலகங்களின் வாடகை 230% வரை உயர்த்தப்பட்டது. அதற்கு முன் பாலகங்களின் மாத வாடகை ரூ.2000 முதல் ரூ.2500 வரை ஆக இருந்த நிலையில், ரூ.4130, ரூ.5,900, ரூ.8,260 ஆக உயர்த்தப்பட்டது. அந்த வாகை உயர்வையே தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், இப்போது மீண்டும் ஒரு முறை வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் ரூ.2000 ஆக இருந்த ஆவின் பார்லர் வாடகை இரு கட்டங்களில் ரூ.9912 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சுமார் 400% உயர்வு ஆகும். ஆவின் பாலகங்களில் ஆயிரக்கணக்கில் வருமானம் கிடைக்காது. மக்கள் சேவையே ஆவின் நிறுவனத்தின் நோக்கம் என்பதால் மிகக் குறைந்த தொகை தான் ஆவின் பாலகங்களை நடத்துவோருக்கு கமிஷனாக வழங்கப்படும். ஆவின் பால் தவிர மற்ற பொருள்கள் அதிக அளவில் விற்பனையாகாது என்பதால் பாலகம் நடத்துவோருக்கு மிகக் குறைந்த வருமானமே கிடைக்கும். அதையும் வாடகை உயர்வு என்ற பெயரில் ஆவின் நிறுவனமே பறித்துக் கொள்வது நியாயமல்ல.

சில பத்தாயிரங்கள் கூட முதலீடு செய்ய வசதி இல்லாதவர்கள் தான் ஆவின் பாலகங்களை நடத்துகின்றனர். பெரும்பாலும் பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரமாக ஆவின் பாலகங்கள் திகழ்கின்றன. இந்த நடவடிக்கையால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், ஆவின் பார்லர்களின் வாடகை உயர்வை ஆவின் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.